Search This Blog

Apr 29, 2019

Jai Sri Lakshmi Nrusimha




நமக்கும் பெருமாளுக்கும் எவ்வளவு தூரம்?



முக்கூர் ஸ்ரீமதழகியசிங்கர் ஸாமான்யமான லௌகிக விஷயங்களின் மூலம் ஆழமான ஸம்ப்ரதாயக் கருத்துக்களை சிஷ்யர்களின் மனதில் பதிய வைப்பதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் அடியேன் காதில் விழுந்தவற்றில் ஒன்று பின்வருமாறு:

ஒரு ஸமயத்தில் சிஷ்யர் ஒருவா் ஸ்ரீமதழகியசிங்கரிடம் விண்ணப்பித்தாராம். ஸ்வாமி! விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியால் சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை அளக்க முடிகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை அளக்க முடிகிறது. இதே போல் பெருமாளுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை அளப்பது ஸாத்யமா? என்றாராம்.

ஸ்ரீமதழகியசிங்கரும் ,ஆஹா! அளக்கலாமே! நாளை வரும்போது ஒரு பேப்பரும் பேனாவும் கொண்டு வா! என்றாராம். அந்த சிஷ்யரும் மறுநாள் பேப்பா் ,பேனா ஸகிதமாக வந்தார். ஆசார்யனும்,இந்த பேப்பரில் என்னுடையவை என்று ஒரு தலைப்பு போட்டுக் கொண்டு, என் பத்நீ, என்புத்ரன், என் வீடு, என் கார், என் பேனா, என் கடிகாரம், என் வேஷ்டி என்று உன் உடமைகளாக நீ நினைப்பவை எல்லாவற்றையும் ஒரு பட்டியலிடு. எல்லாம் முடிந்தபின் கடைசியில் போனால் போகிறதென்று என்னுடைய பெருமாள் என்று எழுதிக் கொள் என்று ஸாதித்தாயிற்றாம். சிஷ்யனும் ஆசார்யனின் கட்டளையை சிரமேற்கொண்டு என் பத்நீ,என் புத்ரன் என்று ஆரம்பித்து என்னுடைய பெருமாள் என்று எழுதி முடித்தாராம்.

அடுத்து என்ன செய்வது? என்று ஆசார்யனை பார்த்தாராம். ஆசார்யன் சிஷ்யனைப் பார்த்து இப்போது அந்தப் பட்டியலில் இருந்து என்னுடையது என்று ஆரம்பித்து நீ எழுதியவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அடித்துக் கொண்டு வா!

உனக்கும், நீ கடைசியாகப் பட்டியலில் எழுதிய பெருமாளுக்கும் இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வரும். கடைசியில் உன்னுடையது என்று எதுவுமே இல்லாமல் நீயும் பெருமாளுமே எஞ்சியிருப்பீர்கள். இதுதாண்டா உண்மை நிலை! நான் எனது உடமை என்கிற நிலை மாறி, யானும் நீயே! எனது உடமையும் நீயே! என்று உனக்கும் பெருமாளுக்கும் உள்ள தூரம் குறைவது மட்டுமல்ல, தூரமே இல்லாமல் போய்விடும் என்று ஸாதித்தாயிற்றாம்.

அஹங்கார, மமகாரங்களை விட்டொழிக்க வேண்டும் என்பதனை எத்தனை அழகாக, தெளிவாக விளக்கினர் ஸ்ரீமதழகியசிங்கர்.