Search This Blog

Oct 9, 2018

கனகதாரா ஸ்லோகம் - தமிழில்





கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீதேவியிடம் செல்வம் வேண்டி பாடப்பெற்ற இருபது அழகான சமஸ்கிருத பாசுரங்களின் தொகுப்பு. இந்த ஸ்தோத்திரத்தை இயற்றியவர் சங்கரர்.

ஸ்ரீதேவி தத்துவம், எல்லா ஜீவராசிகளுடைய உடலையும் மனத்தையும் நெஞ்சையும் இயக்கும் ஜீவசக்தியைக் குறிப்பிடுகிறது. எனினும், ஸ்ரீதேவியை இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்கும் பகவானின் மனைவியாக வழிபடவேண்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது. ஸ்ரீதேவியின் இவ்விரு தன்மைகளையும் சங்கரர் மிக நேர்த்தியாக இந்த ஸ்தோத்திரத்தில் பாடியிருக்கிறார் - சங்கரரைத் தவிர்த்து வேறு யார் இப்படி பாசுரமிட இயலும்?

இந்த ஸ்தோத்திரத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்: வாரஸ்ரீ. சமஸ்கிருத சுலோகங்களை பொருள் சிதையாதபடி மிக கவனமாகவும், அதே சமயத்தில் தமிழ் கவிதை சந்தம் குறையாதபடி மிக சுவையாகவும், மிக அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.

மூல முரட்டு சமஸ்கிருத சுலோகங்களை விடவும் அழகான இந்த தமிழ் பாசுரங்களைப் பாடினாலே ஸ்ரீதேவியின் அருள் பூரணமாய்க் கிட்டும் என்பது என்னுடைய கருத்து.



கனகதாரா  ஸ்தோத்திரம்


மரகதத் தமாலமலர் மொட்டுகளை மொய்க்கின்ற
            பொன்னிறக் கருவண்டுபோல்
மாதவன் மார்பினில் வாசம்பு ரிந்தங்கு
            மெய்சிலிர்ப் பேற்றும்விழிகள்
பரவும்பல் வடிவத்தின் செல்வவள மாகிடும்
            திருமகளின் அழகுவிழிகள்
பரிவோடு தந்தஇரு விழிகளின் கடைநோக்கு
            மங்களமெ னக்கருள்கவே (1)

நீலமா மலரினில் உள்சென்று வெளிவந்து
            உலவிடும் பெண்வண்டுபோல்
நீலமா முகில்வண்ணன் திருமுகம் காண்கின்ற
            ஆசையால் மேல்சுழன்று
கோலங்கண் டுஉடன் நாணமேற மீண்டும்
            கீழ்வந்து மேல்சென்றிடும்
குறுநகையால் அலைமகள் கண்வரிசை என்வாழ்வில்
            செல்வமெல் லாம்தருகவே (2)

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
            லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
            ஐசுவர்யம் தந்தருள்கவே

ஆனந்த மாய்ச்சற்று விழிகளை மூடிய
            முகுந்தனைக் காணும்விழிகள்
ஆனந்தம் தந்தபடி இமைசிறிதும் அசையாது
            இனிமையை வார்க்கும்விழிகள்
மன்மதச் சாயலைத் தன்னிலேற் கும்விழிகள்
            பள்ளிகொள் ளும்பரமனின்
மனைவியாம் திருமகளின் பாதிமூடும் விழிகள்
            செல்வசுகம் யாவுமருள்க (3)

எந்த கடைப்பார்வை நாரணனின் கௌஸ்துப
            மார்பினில் வாழ்கின்றதோ
எந்த கடைப்பார்வை இந்திரனின் நீலமணிச்
            சரமாய் ஒளிர்கின்றதோ
எந்த கடைப்பார்வை சுந்தரத் திருமாலின்
            தேவைகளைத் தருகின்றதோ
அந்த கடைப்பார்வை வீசிடும் கமலமகள்
            மங்களமெ னக்கருள்கவே (4)

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
            லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
            ஐசுவர்யம் தந்தருள்கவே

நீருண்ட மேகமாய்க் காருண்டு காட்சிதரும்
            விஷ்ணுவின் திருமார்பினில்
நிலைகொண்டு ஒளிர்கின்ற மின்னலா கிஅகில
            உலகுக்கும் தாயுமாகி
பார்கவ குலத்தினில் அவதரித் துபூஜை
            செய்வதற் குரியதாகி
பரிமளிக் கும்வடிவம் எதுவோஅது என்னில்
            மங்களம் பொழியட்டுமே (5)

மங்கலங் கள்யாவும் தன்னிடத் தில்கொண்ட
            மாயன்வை குந்தன்நெஞ்சில்
மதுகைட பர்யெனும் வலிமைமிகு அசுரரை
            மாய்த்தத்திரு மாலின்நெஞ்சில்
மன்மதன் சென்றமர வழிசெய்த வைஅந்த
            கடல்குமரித் திருவின்பார்வை
புன்சிரிப் பேந்திடும் அந்தகடை கண்பார்வை
            என்னையும் அருளட்டுமே (6)

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
            லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
            ஐசுவர்யம் தந்தருள்கவே

உலகாளும் வாய்ப்பையும் இந்திரப் பதவியையும்
            வேடிக்கையாய்க் கொடுக்கும்
முரணைவெற் றிக்கொண்ட விஷ்ணுவிற் குப்பெரும்
            ஆனந்தம் தந்துநிற்கும்
நீலோத்பல மலரின் உட்புறப் பகுதிபோல்
            நளினமாய்த் தோன்றிநிற்கும்
நிலமகளின் கடைநோக்கில் ஒருபாதி என்மீது
            கணமேனும் பொழியட்டுமே (7)

மறுமைக்குத் தேவையாய் உள்ளன செயல்களைச்
            செய்கின்ற தகுதிஇல்லா
மனிதருக் குங்கூட எந்தகரு ணைப்பார்வை
            சொர்க்கத்தைத் தருகின்றதோ
அந்தகரு ணைப்பார்வை கொண்டவள் தாமரை
            மலர்மீது வீற்றிருக்கும்
அன்னையாம் ஸ்ரீமஹா லக்ஷ்மியின் திருநோக்கு
            தேவைகளை அருளட்டுமே (8)

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
            லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
            ஐசுவர்யம் தந்தருள்கவே

கருணையென் னும்மருள் காற்றினை நன்மைதரக்
            கூட்டியே வந்துநிற்கும்
திருமகளின் விழியென்னும் தயைகொண்ட நீருண்ட
            கரியமா வண்ணமேகம்
ஏழ்மையால் துயருற்று வாழ்கின்ற சாதகக்
            குஞ்சுகளாம் எங்களுக்கு
செல்வமழை பெய்துபெரும் பாவம்வறு மைநீக்கி
            வளமெலாம் அருளட்டுமே (9)

கலைமாம கள்என்றும் கருடக்கொ டியானின்
            அலைமாம கள்என்றுமாய்
நிலமாளும் சாகம்ப ரிஎன்றும் பிறைசூடும்
            பெம்மானின் மலைமகளுமாய்
உலகத்திலே நின்று உயிர்படைத் துக்காத்து
            முடிப்பதை விளையாட்டென
செய்பவள் மூவுலகம் ஆளும்நா ராயணனின்
            நாயகியே போற்றிபோற்றி (10)

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
            லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
            ஐசுவர்யம் தந்தருள்கவே

நல்லபல செயலுக்கு ஏற்றபடி பயன்தரும்
            வேதவடி வினளேபோற்றி
நளினமிகு அழகிய குணங்களின் உறைவிடமே
            ரதிதேவி போற்றிபோற்றி
எல்லையில் லாசக்தி எனவாகித் தாமரையில்
            அமரும்மலர் மகளேபோற்றி
எங்கும் விளங்கிடும் பூரணமே எழில்புருஷ
            உத்தமனின் துணையேபோற்றி (11)

செங்கமல மலர்போன்ற சிங்கார முகங்கொண்ட
            திருமகளே போற்றிபோற்றி
மந்தரம லையசையும் பாற்கடல் தோன்றிய
            மாமகளே போற்றிபோற்றி
சந்திரத் தேவனுடன் தேவரமு தத்தினுடன்
            பிறந்தவளே போற்றிபோற்றி
நந்தகோ விந்தநா ராயணனின் நாயகியே
            நிலமகளே போற்றிபோற்றி (12)

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
            லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
            ஐசுவர்யம் தந்தருள்கவே

தங்கநிறத் தாமரையைச் செந்தளிர்க் கரமேந்தும்
            செந்திருவே போற்றிபோற்றி
தரணிமண் டலம்முழுதும் அரசாட்சி செய்கின்ற
            நாயகியே போற்றிபோற்றி
தேவாதி தேவர்க்கு ஆதிமுதல் தயைபுரியும்
            செல்வமே போற்றிபோற்றி
சார்ங்கமென் னும்வில்லை ஏந்திடும் ராமனின்
            இல்லறமே போற்றிபோற்றி (13)

ப்ருகுமுனியின் புதல்வியாய் அவதாரம் செய்தவளே
            தேவியே போற்றிபோற்றி
திருமாலின் வலமார்பில் நிறைவாக உறைபவளே
            திருமகளே போற்றிபோற்றி
கமலமென் னும்மலரில் ஆலயம் கொண்டவளே
            லக்ஷ்மியே போற்றிபோற்றி
காலடிகள் மூன்றினால் உலகினை அளந்ததா
            மோதரனின் துணையேபோற்றி (14)

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
            லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
            ஐசுவர்யம் தந்தருள்கவே

ஒளிசுடரும்  காந்தியும் தாமரை விழிகளும்
            கொண்டவளே போற்றிபோற்றி
உலகம் அனைத்தையும் இயக்கிடும் மங்கல
            நாயகியே போற்றிபோற்றி
அமரருடன் அனைவரும் அடிபணிந் தேதொழும்
            அலைமகளே போற்றிபோற்றி
நந்தகோ பன்குமரன் நந்தகோ பாலனின்
            நாயகியே போற்றிபோற்றி (15)

செல்வங்கள் தருபவளே ஐம்புலனும் ஆனந்தம்
            பெற்றிடச் செய்யும்தாயே
பல்வகைப் பதவிகள் அரியாச னங்களைத்
            தருகின்ற கமலநயனீ
அல்லல் வினைகளைப் போக்குபவ ளேஎங்கள்
            அஞ்ஞானம் நீக்குபவளே
செல்வியே தொழுகிறேன் உன்னையே அன்னையே
            என்னையே என்றுங்காப்பாய் (16)

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
            லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
            ஐசுவர்யம் தந்தருள்கவே

தொழுகின்ற அடியார்க்குப் பொழுதெலாம் துணைநின்று
            செல்வங்கள் யாவற்றையும்
முழுதாகப் பொழிகின்ற திருநோக்கு எவருடைய
            கடைக்கண்ணின் கருணைநோக்கு
அந்தகரு ணைநோக்கு முரஹரியின் மனம்வாழும்
            திருமகளே உனதுநோக்கு
உன்னைஎன் மனதாலும் மெய்யாலும் சொல்லாலும்
            துதிசெய்து புகழ்கிறேன்நான் (17)

பத்மமல ரில்வாழும் பத்மினி பத்மத்தைக்
            கையேந்தும் பதுமநிதியே
புத்தொளி வீசும்வெண் ணாடைமண மாலையுடன்
            ஒளிர்கின்ற செல்வச்சுடரே
பகவதிஹரி நாதனின் ப்ராணநா யகியே
            நெஞ்சமெல் லாம்அறிந்தோய்
ஜகம்மூவி னுக்கும்பெரும் ஐசுவரியம் தருபவளே
            என்னிடம் கருணைகாட்டு (18)

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
            லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
            ஐசுவர்யம் தந்தருள்கவே

தேவகங் கைநதியின் தெளிவான தூயநல்
            நீரினைப் பொற்குடத்தில்
திசைகளில் மதயானை கள்ஏந்தி நீராட்டத்
            திகழ்கின்ற தெய்வஅழகே
தாவுமலை கடலரசன் பெற்றபெண் ணேஉலகம்
            யாவிற்குமே அன்னையே
தரணிகளின் தலைவனாம் திருமாலின் மனைவியே
            காலைஉனைத் துதிசெய்கிறேன் (19)

அரவிந்த மலர்போன்ற அழகியக் கண்ணனின்
            ஆனந்த காதலிநீ
ஐசுவரியம் இல்லாமல் ஏழ்மையில் உழல்வதில்
            முதல்வனாய் நிற்பவன்நான்
அருள்வெள்ளம் அலைமோதும் உன்கடைக் கண்களின்
            பார்வைக்கு ஏங்கிநிற்கும்
அடியனை உன்தயை உண்மையாய்த் தேடிடும்
            என்னைநீ காணவேண்டும் (20)

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
            லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
            ஐசுவர்யம் தந்தருள்கவே

மூன்றுவடி வங்களின் உருவமாய் நிற்பவள்
            மூவுலகி னிற்குந்தாயாம்
மோகன லக்ஷ்மியை மேற்சொன்னத் துதிகளால்
            நிதம்புகழும் மனிதர்எவரும்
சான்றோர்கள் போற்றிடும் அறிவாளி ஆகிறார்
            செல்வமெல் லாம்பெறுகிறார்
ஜெகமிதில் மேம்பட்ட குணமெலாம் கைவர
            பாக்கியம் பலபெறுகிறார் (21)




1 comment:

  1. மிகவும் பாராட்டத்தக்க செயல். கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு புரிந்து கொள்வதற்கு மிகவும் சுலபமாக இருகிறது. இயல்பான வார்த்தைகளை சரியான முறையில் சேர்த்துத் தந்திருக்கிறீர்கள். வாழ்க வளமுடன். நன்றிகள் பல.

    ReplyDelete