Search This Blog

Jul 12, 2020

அர்த்தநாரீஸ்வரர் - ஸ்ரீ மஹா பெரியவா

ஸ்ரீ மஹா பெரியவா யாரோடும் அதிகம் பேசாமல் ஜாடை மாடையாக இருந்த சமயம். எனது மாமியார் ஜெயலஷ்மி ( பொள்ளாச்சி ஜெயம் என்று ஸ்ரீ மடத்தில் அழைக்க பட்டவர் ) பெரியவா தரிசனத்திற்கு சென்று இருந்தார்கள் . நமஸ்கரித்து விட்டு சற்று ஒதுஙகி நின்று கொண்டு இருந்தார் .அப்போது பெரியவா கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்த ஸ்ரீ மேடம் பாலு (பிற் காலத்தில் பாலு ஸ்வாமிகள் ஆகி சமீபத்தில் சித்தி ஆனவர்.

“ஜெயம் நீ பெரியவா பாதுகையே வாங்கிக்கவில்லையே நீ பெரியவாளிடம் கேள் . நிச்சியம் உனக்கு கொடுப்பர் என்று சொன்னார் . உடனே அம்மா நான் போய் கேட்க மாட்டேன் . அவராக கொடுத்தால் கொடுக்கட்டும்” என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார் தீவிர பக்தியோடு பிடிவாதமும் பெரியவாளிடம் ஸ்வாதீனமும் உடையவர் எங்கள் அம்மா.

சிறிது நேரம் கழித்து பெரியவா இருந்த இடத்திற்கு அம்மா வந்தாள். இடையில் என்ன நனடந்தது என்று தெரியாது. மஹா பெரியவா அர்த்த புஷ்டி உடன் கைங்கரியம் பாலுவை பார்க்க , அவர் உடனே உள்ளே சென்று ஒரு ஜோடி பாதுகையை கொண்டு வந்து பெரியவா முன் வைத்தார். பெரியவா அந்த கால கட்டத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து தரிசனம் கொடுப்பது வழக்கம். ஸ்ரீ பாலு கொண்டு வந்த பாதுகையை பெரியவா தன பாதங்களில் மாட்டி கொண்டார்.

சிறிது நேரம் கழித்து பாலு மாமா பெரியவா பாதத்தில் இருந்து கழட்ட முயற்சி செய்தபோது பெரியவா அனுமதிக்க வில்லை .கால்களை உள்ளே இழுத்துக்கொண்டார்கள். இரெண்டு மூன்று முறை முயற்சி செய்தும் , கூடயஇருந்த தொண்டர் முயற்சித்த போதும் அனுமதிக்கவில்லை . ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் பெரியவா பாதத்தை அந்த பாதுகை அலங்கரித்து கொண்டிருந்தது.

மஹா பெரியவாளுடன் பல ஆண்டுகள் இருந்ததால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பாலு மாமா போன்றவர்கள் ஊகிக்க கூடியவர்களாகவே இருந்தார்கள். பாலு மாமா அம்மாவிடம் வந்து
“ஜெயம் பாதுகை உனக்கு தான் . எங்களை கழட்ட விடவில்லை பெரியவா. நீயே போய் கழட்டி கொள்” என்றார்.

அம்மா நடுங்கி பொய் விட்டாள்.

“ஐயய்யோ நான் மாட்டேன்” என்று சொல்லி விட்டார் .

“சரி நீ பெரியவா முன்னே போய் நில்லு . என்ன நடக்கிறது என பார்ப்போம்” என்று பாலு மாமா சொல்ல , தைரியத்தை வரவழைத்து கொண்டு , அம்மா பெரியவா முன் பொய் நின்றாள்.

என்ன ஆச்சரியம்

மஹா பெரியவா தன பாதங்களை சற்றே தூக்கி அம்மாவின் முன் நீட்டினார்கள். இதனை பார்த்து கொண்டிருந்த பாலு மாமா, “கழற்றி கொள்” என்று அம்மாவை தூண்டி விட அம்மாவும் மிகுந்த பயத்துடன் , பெரியவா பாதங்களில் இருந்து பாதுகைகளை கழற்றி கொண்டு , நமஸ்கரித்து விட்டு , மெல்ல நகர்ந்தாள் .

நாலடி சென்ற பின் கையில் இருந்த பாதுகையை பார்த்த அம்மா, ஏதோ சந்தேகத்துடன் பெரியவாளை திரும்பி பார்க்க, தன மௌனத்தை கலைத்து கொண்டு “இடது பாதம் தானே சின்னதா இருக்கு போ போ” என்று உரக்க சொன்னார்கள்.

அம்மாவிற்கு சுரீர் என்று அதற்க்கான விளக்கம், வெளிப்படையாக சொல்லாமலே புரிந்தது. கைகளில் இருந்த பாதுகைகளை பார்த்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றாள். நடந்து கொண்டிருந்த மௌன காட்சிகளை பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை. அவர்கள் அனைவரின் கண்களும் அம்மாவின் கைகளில் இருந்த மஹா பெரியவா பாதுகைகளிலேயே இருந்தது .

மகா பெரியவா ,விஸ்ராந்திக்கு (ஓய்வு ) சென்ற பின் , பாலு மாமா அம்மாவிடம் வந்து, “ஜெயம் என்ன விஷயம்” என கேட்க, அம்மா எதுவும் சொல்லாமல் தன் கைகளில் இருந்த பாதுகைகளை காண்பித்தாள். வலது பாதுகையை விட இடது பாதுகை அளவில் சற்று சிறியதாக இருந்தது ..

அதை பார்த்தவுடனே “அடடா வித்தியாசமாக இருக்கே, அவசரத்தில் நான் கவனிக்க வில்லை . வேணும்னா வேறு பாதுகை பெரியவா கிட்டே இருந்து வாங்கி தரட்டுமா?” என்று கேட்டார்.

உடனே அம்மா “என்னடா பாலு, இடது பாதம் தானே சின்னதா இருக்கு? என்று பெரியவா என்னிடம் கேட்டதை நீ கவனிக்கவில்லையா? தானே அர்த்தநாரீஸ்வரர் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டாரே , உனக்கு புரியலையா? அம்பாள் பாதம் ஸ்வாமியின் பாதத்தை விட சிறியது இல்லையா?” என்று அம்மா கேட்டதும் பாலு மாமா அந்த இடத்திலேயே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

இதில் விசேஷம் என்னவென்றால், அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட பாதுகையில் இடது பாதுகை சிறியதாக இருந்தது மாத்திரம் இல்லை, பாதுகையில் கட்டை விரல் மாட்டி கொள்வதற்கு குமிழ்கள் இருக்கிறதல்லவா? அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட பாதுகையில் வலது பாதுகையின் குமிஸ் சற்று கடினமாக. பெரியதாக ஆண்மையுடன் இருக்கும். இடது பாதுகையின் குமிஸ் சற்று நளினமாக சிறியதாக பெண்மையுடன் இருக்கும்.

இப்படி அமைந்தது , எங்கள் அம்மாவின் அசைக்க முடியாத பெரியவா பக்திக்கு கிடைத்த அரிய பொக்கிஷம். எங்கள் இல்லத்தில்( வெப்பத்துர் )பூஜையில் இருக்கிறது. கையில் கிடைத்ததை பாலு மாமா எடுத்து வந்திருந்தாலும் அவரை இவ்வாறு எடுத்துவர செய்தது அந்த பரப்ரம்மம் தானே!









No comments:

Post a Comment