Search This Blog

Feb 21, 2019

பாட்டிகள் மஹாத்மியம் - ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம்

பாட்டிகள் மஹாத்மியம் 4 [பதரி பாட்டி-கண் தெரியாத பாட்டி-பட்டுப் பாட்டி]
பதரி பாட்டி
ஒரு நாள் காஞ்சீபுரத்தில் ஏதோ கோவிலில் மத்யான்னம் வரைக்கும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, வந்திருந்த எல்லோருக்கும் பெரியவா தர்ஶனம் தந்து கொண்டிருந்தார்.
ஒரு வயஸான பாட்டி நின்று கொண்டிருந்தாள். பெரியவா தர்ஶனம் ஒன்றுதான் அவளுக்கு வாழ்வாதாரம்! பெரியவாளின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினாள்.
“ஒனக்கென்ன வேணும்? கேளு…..”
தன்னுடைய பரம பக்தை என்று தெரியும். சிரித்துக் கொண்டே அந்த பாட்டியை கிண்டினார்.
“எனக்கு… இனிமே என்ன வேணும்? ஸதா ஸர்வ காலமும் பெரியவாளை ஆராதிச்சுண்டே இருந்தா, அது ஒண்ணே போறும்..”
“அதான் இருக்கே!…. கொறையே இல்லாம பண்றியே! இப்போ, இந்த க்ஷணம் ஒனக்கு ஏதாவது ஆசை இருக்கா? சொல்லு…..”
சுற்றி இருந்தவர்கள், ‘ஏன் இப்படி குடைகிறார்? ‘என்று புரியாமல் முழித்தனர்.
பெரியவா அப்படி சொன்னதும் பாட்டி கொஞ்சம் தயங்கினாள்.
விடுவாரா என்ன? இன்று அந்த பாட்டி வாயைக் கிண்டி கிளறி ஏதோ ஹிமாலய விஷயத்தை, தூஸு மாதிரி உலகுக்கு காட்டும் திருவிளையாடல் அரங்கேற வேண்டாமா?
“சொல்லு.! சொல்லு! பரவாயில்ல! என்னால முடிஞ்ச அளவு ஒத்தாஸை பண்றேன்…..”
[ஓஹோ! முடிஞ்ச அளவாமே!… இவருக்கு ஆரம்பம்னோ, முடிவுன்னோ, அளவுன்னோ ஏதாவது இருக்கா என்ன?]
“எனக்கு ஒரே ஒரு ஆசைதான் பெரியவா…! இந்த உஸுர் போறதுக்குள்ள…. ஒரே ஒரு தடவை அந்த பத்ரி நாராயணனை பாக்கணும்..!”
மெதுவான குரலில் தயங்கித் தயங்கி சொன்னாள்.
இதற்காகவே காத்திருந்தவர் போல் பலமாக சிரித்தார்…
“பத்ரி நாராயணனா?…. நீதான், எதிர்லேயே…. பாத்துண்டுதானே இருக்கே?”.…….
எதிரில் பெரியவாதானே இருக்கிறார்? பத்ரி நாராயணன் எங்கே?
“என்ன ஸந்தேஹமா?……
“ஸந்தேஹமில்ல….. பெரியவா சொல்றது புரியல”
இதோ! ஹிமாலய உண்மை திறந்தது!
தனக்கு மேலே அண்ணாந்து பார்த்தார்……
“மேல பாரு…! இது என்ன மரம்?”
“எலந்தை மரம்”
“ஸம்ஸ்க்ருதத்ல…. எலந்தைக்குத்தான் பதரி….ன்னு பேரு.!… தெரியுமோ?”
“நாராயணா! நாராயணா!”
பாட்டியும், சுற்றி இருந்தவர்களும் பேச்சு எழாமல், கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.
ஆம். ‘பதரி மரத்தின் கீழே இருக்கும் நாராயணன், நானே! ‘என்று பட்டவர்தனமாக பெரியவா திருவாக்கில் வந்ததை நேரில் கேட்க அந்தப் பாட்டியும் மற்றவர்களும் என்ன புண்ணியம் செய்தனரோ?
கண் தெரியாத பாட்டி
ஒருமுறை பெரியவா, ஆந்த்ரா தமிழ்நாடு எல்லைப்பக்கம் பாதயாத்ரையாக போனபோது, பரம பூஜ்யர்களான ஓடாச்சேரி ஸ்வாமிகள், அனந்தானந்த ஸ்வாமிகள், திண்ணியம் ஸ்வாமிகள், உபநிஷத் ப்ரஹ்மேந்த்ராள் மடத்து ஸ்வாமிகள், தெனாலி தெலுங்கு ஸ்வாமிகள் ஆகியோரும் பெரியவாளோடு கூடவே நடந்து வந்தார்கள்.
ஆஹா! என்ன ஒரு கண்கொள்ளா காட்சியாக இருந்திருக்கும்!
பெரியவாளோடு உத்தமமான ஸன்யாஸிகள் எல்லோரும் வந்து கொண்டிருப்பதை அறிந்த பக்தர் ஒருவர் அவர்களுடைய வருகையை எதிர்பார்த்து சாலையோரத்தில், தன் வயஸான பாட்டியோடு நின்று கொண்டிருந்தார்.
பாட்டிக்கோ கண்பார்வை குறைவு! கண்களை இடுக்கி இடுக்கி பார்த்துக் கொண்டிருந்தாள்.
இதோ! ஸன்யாஸ அலைகளோடு ஸன்யாஸ மஹாஸமுத்ரமே நடந்து வருவது போல், பெரியவா நடந்து, நடந்து இவர்கள் அருகாமையில் வந்துவிட்டார்..!
நின்று கொண்டிருந்த பேரன் சடாரென்று பெரியவா பாதங்களில் நமஸ்காரம் பண்ணினார். பாட்டிக்கோ பாவம்…. ஏழெட்டு காவியுடைகள் நிழலாடுவது போல் தெரிந்தாலும், இதில் பெரியவா எங்கே நிற்கிறார் என்பது தெரியாமல், பாட்டி தடுமாறுவதை பெரியவா கவனித்தார்.
ஆஹா! “யாரோ ஒரு வயஸான பாட்டிதானே! குத்துமதிப்பா நமஸ்காரம் பண்ணட்டும்” என்று அலக்ஷியம் பண்ணாமல், அவளுக்கும் கூட விளங்கும்படி தன்னைக் காட்டிக் கொடுக்க பெரியவா கையாண்ட அனுக்ரஹம்… கண்களில் கண்ணீர் வருகிறது.
மெல்லத் தன் பாதுகைகளை ‘தட் தட்’ என்று, வழக்கமே இல்லாத புது வழக்கமாக, தரையில் தட்டி ஒலி எழுப்பினார்.
எதற்காக?
ஸாதாரணமாக பெரியவாளோடு பாதயாத்ரையாக போகும்போது, கூட நடக்கும் பாரிஷதர்களும், பக்தர்களும் ஏன்? எத்தனை பெரிய ஸந்யாஸியாக இருந்தாலும், செருப்பு போட்டுக் கொள்ள மாட்டார்கள்!
ஜகத்குரு இல்லையா?....
பாட்டிக்கு கண் பார்வைதான் குறைவாக இருந்தது. ஆனால், புத்தி தீக்ஷண்யம் அபாரமாக இருந்ததாலும், யதி தர்மம் அறிந்திருந்ததாலும், ‘பெரியவா மட்டுந்தான் பாதுகை போட்டுக் கொண்டிருப்பார். ஆகையால் பாதுகையை தட்டும் ஒலியும், பெரியவாளிடமிருந்துதான் வந்திருக்கும்’ என்று ஸரியாக ஊகித்து, நம் பெரியவா முன்னால் வந்து விழுந்து வணங்கினாள்.
பெரியவாளின் பக்தானுக்ரஹ அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை! அல்பங்களான நமக்கும் பெரியவாளை ‘தெளிவாக’ நமக்குள் காண, பெரியவாதான் தன்னைக் காட்டிக் கொடுக்கவேண்டும் என்று ஸதா பிரார்த்தனை பண்ணுவோம்.
பட்டுப்பாட்டி
கும்பகோணத்தை சேர்ந்த பட்டுப் பாட்டி, பெரியவாளிடம் அளவிலாத பக்தி கொண்டவள். வ்யாஸராய அக்ரஹாரத்திலிருந்த தன்னுடைய ரெண்டு வீடுகளையும் மடத்துக்கே எழுதி வைத்தாள்.
பெரியவா ஸதாராவில் முகாமிட்டிருந்த போது, பாட்டியும் அங்கு வந்திருந்தாள்.
அப்போது நல்ல குளிர்காலம்!
ஒருநாள் காலை, தன்னுடைய பாரிஷதரான பாலு அண்ணாவை அழைத்தார்…
”இந்தா… பாலு! இந்தக் கம்பிளிய கொண்டு போயி, பட்டுப் பாட்டிட்ட குடு”
“ஸெரி……”
வாங்கிக் கொண்டு போனார். ஆனால் நாள் முழுக்க இருந்த கார்யங்களில், கம்பிளியை குடுக்க மறந்து விட்டார்.
நள்ளிரவாகிவிட்டது!
பெரியவா படுத்துக் கொண்டுவிட்டார்! பாலு அண்ணா கொஞ்சம் தள்ளி படுத்துக் கொண்டு தூங்கிவிட்டார்!
“பாலு!……”
பெரியவாளின் மதுரக்குரல் கேட்டு எழுந்து கொண்ட பாலு அண்ணாவிடம்….
“ஏண்டா… பட்டுப் பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?”
“ஆஹா! மறந்தே போய்ட்டேனே!…”
தூக்கிவாரிப் போட்டது!
“இல்ல பெரியவா…… மறந்தே போய்ட்டேன்”
பெற்றவளுக்கு மட்டுந்தான், தன் குழந்தைகள் எத்தனை தொண்டு கிழமானாலும் அவர்களுடைய வெளித் தோற்றத்தைப் பார்க்கத் தெரியாமல், எப்போதுமே குழந்தையாகவே பார்க்க முடியும்!
“ஸெரி…. இப்போவே போயி, அவ.. எங்க இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கம்பிளியை அவட்ட குடுத்துட்டு வா”
“இந்த நடுராத்ரிலயா? குளுரான குளுரு! எங்க போய் பாட்டிய தேடறது?….. காலம்பற குடுத்துடறேனே பெரியவா!…”
தெய்வக் குழந்தை அடம் பிடித்தது!
“இல்ல..! இப்பவே குடுத்தாகணும்! என்னடா… நீ?… ராத்ரிலதான குளிர் ஜாஸ்தி? பாவம். நடுங்கிண்டிருப்பா!”
கம்பிளியை எடுத்துக் கொண்டு, அந்த அர்த்த ராத்ரியில் வீடுவீடாக அலைந்து திரிந்து, இருட்டில் முடங்கிக் கிடக்கும் உருவங்களை எல்லாம் மிதித்து விடாமல், உற்று உற்று பார்த்து, கடைஸியில், கபிலேஶ்வர் என்ற மராட்டியர் வீட்டில் ஒரு ஓரத்தில் குளிரில் தன் புடவையை சுருட்டி, முடக்கிக் கொண்டு கிடந்த பாட்டியைக் கண்டுபிடித்துவிட்டார்!
“பாட்டி! ….பாலு…..”
“ம்…என்னப்பா?….என்ன வேணும்?..”
தூக்கத்திலிருந்து முழித்துக் கொண்ட பாட்டியின் காதில் அம்ருதமாக விழுந்தது…. பாலு அண்ணா சொன்னது…..
“பெரியவா…. இந்தக் கம்பிளிய ஒங்ககிட்ட குடுக்கச் சொல்லி, காலமேயே சொன்னா! மறந்தே போய்ட்டேன்! பெரியவா, இப்போ ஞாபகமா கேட்டா! குடுக்கல-ன்னதும், ஒடனேயே எங்க இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சு குடுக்கச் சொன்னா! இந்தாங்கோ..”
“பெரியவாளா!!…..என்னப்பனே! இந்த ஜீவனுக்கும் இப்டியொரு அனுக்ரஹமா!…”
பாட்டி அடைந்த ஸந்தோஷத்துக்கு ஏதாவது அளவு இருக்குமா என்ன? கதகதப்பான கண்ணீரோடு, கம்பிளிக்குள் முடங்கினாள்.
பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனை அணைத்து, பரம ஹிதத்தை குடுத்தது.
ஶ்ரீ ஆசார்யாள் பாததூளி






No comments:

Post a Comment