ஒவ்வொரு சமயமும் தங்கள் கடவுள் தான் உயர்ந்தவர் என்று அடம் பிடிக்கின்றன.
மற்ற மதங்களின் கடவுளையோ , அந்த மதம் சொல்லும் உண்மையையோ பார்க்க கூட தயாராய் இல்லை.
தங்கள் கடவுள், தங்கள் உண்மை என்று அதிலேயே லயித்து விடுகிறார்கள் ..
அது எப்படி இருக்கிறது என்றால் ராமனின் தோள் அழகை கண்டவர்கள் அதை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தது மாதிரி இருந்ததாம்
தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரை ஒத்தார்.
-------------------------------------------------------------------------------
பொருள்:
தோள்கண்டார் = இராமனின் தோள்களை கண்டவர்கள்
தோளே கண்டார் = அந்த தோளை மட்டும் தாம் பார்க்க முடியும். அதை விட்டு அவர்கள் கண்களை எடுக்க முடியாது, அவ்வளவு அழகு
தொடுகழல் = கழல் எப்போதும் தொட்டு கொண்டிருக்கும்
கமலம் அன்ன = தாமரை போன்ற
தாள்கண்டார் = அடிகளை கண்டவர்கள்
தாளே கண்டார்=அந்த திருவடிகளை மட்டுமே கண்டார்
தடக்கை கண்டாரும் = கையை கண்டவரும்
அஃதே= அதே போல் கையை மட்டும் கண்டனர்.
வாள்கொண்ட=வாள் போன்ற கூரிய
கண்ணார் = கண்களை உடைய பெண்கள்
யாரே வடிவினை முடியக் கண்டார் = யாருமே அவன் முழு அழகையும் காணவில்லை
ஊழ்கொண்ட = எப்போது தோன்றியது என்று அறியா காலம் தொட்டு உள்ள
சமயத்து அன்னான் = மதங்களில் உள்ள கடவுளின்
உருவுகண் டாரை ஒத்தார். = உருவத்தை கண்டவர்களை போல அந்த பெண்கள் இருந்தார்கள்
எப்படி கடவுளை முழுமையாக கண்டு கொள்ள முடியாதோ அது போல இராமனின் அழகையும் முழுமையாக கண்டு உணர முடியாதாம்....
No comments:
Post a Comment