Search This Blog

Jun 30, 2018

கிருஷ்ணன் என் குழந்தை ... லக்ஷ்மி ந்ருஸிம்ஹர் என் அம்மா அப்பா ..

....
“எனக்கு எழுத வராது. சொல்றேன் . எழுதிப்போடேன்” என்றார் . நான் பதில் சொல்லுமுன்னே தொடங்கிவிட்டார்.

“என் தங்கை மாமனார் மாமியாரோடே ஊரில் இருக்கிறாள். அவளுக்கும் அவள் மாமியாருக்கும் ( அவருக்கு 84 வயது) நடக்கும் உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கும்.
கோயிலுக்குப் போயிட்டு வருவா “அம்மா, இன்னிக்கு குட்டி க்ருஷ்ணனுக்கு கொண்டையில பூ சுத்தியிருந்தா. சந்தன அலங்காரம் மாதிரி இருந்த்து. ‘வாடீ, வீட்டுக்குப் போலாம்”ன்னு கூப்பிடறேன். மாட்டேன்னுட்டு சிரிக்கறது”

நித்யகல்யாணி மலர்கள் வீட்டில் உதிர்ந்து கிடக்க்கும். அதைப் பொறுக்கி வைத்துப் பூச்சரம் தொடுத்துக்கொண்டிருப்பாள் மாமி.  காலை நீட்டிக் கீழே உக்கார்ந்து, சுவற்றில் சாய்ந்துகொண்டே , நடுங்கும் குரலில் அவள் சொல்லுவாள்.

“சந்துல , செதும்பா ரெண்டு போடு போட்டு, தரதரன்னு இழுத்து, ஒக்கல்ல வைச்சுண்டு வரவேண்டியதுதானே நீ?  அதென்னா, ஒருத்தி ஆசையாக் கூப்படறப்போ வரமாட்டேன்னு அடம், அதுக்கு? எல்லாம் அந்த யசோதை கொடுத்த செல்லம்”

அட, இப்படித்தான் கற்பனையாய்ப் பேச்சுப் போய்க் கொண்டிருக்கும்போல என்று நினைத்திருப்பேன். வெகு இயல்பாக தங்கை “ அம்மா, இன்னிக்கு மிளகு ரசம் வைச்சுட்ட்டுமா?” என்பாள்.

“நானே சொல்லணும்னு நினைச்சேன். இவருக்கு காலேலேர்ந்து லேசா இருமல். நேத்திக்கு ”லேசா மழை வர்றமாதிரி இருக்கு, ஒரு பனியனைப் போட்டுக்கும்”ன்னேன். சொன்னதைக் கேட்டாத்தானே இந்த மனுஷன்? சினிமா ஹீரோன்னு நினைப்பு. வெத்துடம்பாப் படுத்துண்டார். இப்ப இருமல். ஓய்.! மிளகு ரசம் தளிகைதான் இன்னிக்கு உமக்கு. ஆமா.”

வெகு இயல்பாக, புருஷோத்தமனையும், புருஷனையும் அன்பாய் அதிகாரம் செய்து ஆள்பவர்கள் நமது பெண்கள்.
...



No comments:

Post a Comment