May 10, 2019

குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்


சிறு வயதில், எனது பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், விஷு கொண்டாடியது நினைவுக்கு வருகிறது. முதல் நாள் இரவே, பூஜைக்கு உரிய வெற்றிலை, பாக்கு, வெள்ளரி, காசு, கண்ணாடி, உருளி, நாராயணீயம். கொன்னப்பூ, அரிசி முதலியவற்றை எடுத்து வைப்பார்கள். என்னையும் "கைநீட்டம்" பெற வரச்சொல்லுவார்கள். நான் காலையில் "கைநீட்டம்" பெற சந்தோஷமாகப்போவேன். குருவாயூரப்பன் மீது எனக்கு 'மாளாக்காதல்' உண்டாக எனது பாட்டியும், அவரது தோழியான ஒரு மாமியும் சொன்ன கதைகளே முக்கிய காரணம்.  'லாலு' என்று நான் அன்புடன் அழைக்கும் அந்த மாமி,  சிறு வயதில் எனக்குச் சொன்ன கதை இப்போது ஞாபகம் வருகிறது. கதைக்குச் செல்வோமா?

கேரளத்தில் ஒரு சிறு பாலகன் இருந்தான். அவன் தினமும் குருவாயூரப்பனை தரிசனம் செய்யக் கோவிலுக்குப் போவான். அவனுக்கு ஸ்ரீ குருவாயூரப்பனை நேரிலே பார்க்க மிகவும் ஆசை. ஒரு நாள், கண்ணனை எப்படியும் பார்த்தே தீருவது என்று முடிவு செய்து, கண்ணனிடம் பிரார்த்தித்தான். கண்ணனோ வரவில்லை. கண்ணா வா என்றான் . நான் உன்னை நேரிலே பார்க்க வேண்டும் என்றான். நீ வராவிட்டால் நான் இங்கேயே இருப்பேன் என்று கூறி கோவிலிலேயே உட்கார்ந்து விட்டான். நடையும் அடைத்தாயிற்று.

கண்ணன் வரவில்லை. அழுதான். அரற்றினான். குழந்தையல்லவா? அவன் அழுவது கண்ணனுக்கு பொறுக்கவில்லை. வந்தான். எப்படி? மயில் பீலி, பட்டு, பீதாம்பரம் உடுத்திக்கொண்டு, குழலூதிக்கொண்டுவந்தான். குழந்தையுடன் விளையாடினான். சிறுவனுக்கு ஒரே சந்தோஷம். கண்ணனோ தன்னுடைய அரைஞாணை அவனுக்கு அளித்தான்.

சிறுவன் சந்தோஷமாக வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் நான் கண்ணனுடன் விளையாடினேன் என்றான். அம்மாவோ நம்பவில்லை. இங்கே பார் "கண்ணன் தன்னுடைய கிண்கிணியை எனக்கு கொடுத்தான் பார்" என்றான். கோவிலிலும் அரைஞாணைக் காணாததால் அனைவரும் சிறுவன் அதைத் திருடியதாக நினைத்தார்கள். அம்மா திட்டினாள். அதைப்பிடுங்கி வீசினாள். அது பக்கத்தில் இருந்த கொன்றை மரத்தின்மேல் சிக்கிக்கொண்டது. உடனே, அந்த மரம் முழுவதும் தங்க நிறத்தில் கிண்கிணியைப்போன்ற பூக்கள் பூத்துக்குலுங்கின. அப்பொழுது, "உன் மகனுடன் நான் விளையாடியது நிஜம்" என்று அசரீரி வாக்கு கேட்டது. அது முதல் "கொன்னப்பூ" பூஜைக்கு மிகவும் உகந்ததாகப் போற்றப்பட்டது.

இப்பொழுது மேலே உள்ள படத்தில் குருவாயூரப்பனின் அரைஞாணும் கொன்னப்பூவின் மொக்குகளும் ஒரே மாதிரி இருப்பது போல் தெரிகிறதா?
--------
ஸ்ரீ கிருஷ்ணாய துப்யம் நம:
ஸ்ரீ குருவாயூரப்பா ஶரணம்.
ஓம் நமோ நாராயணாய.
--------
our sincere thanks to - 🙏
andavantiruvadi.blogspot.com

No comments:

Post a Comment