ராமானுஜ தேசிக முனிகள்...
மனதுக்கு இனியான் பற்றி எழுதிக்கொண்டு இருந்த போது ஸ்ரீநிவாசன் என்பவர் ( அவரை நான் இதற்கு முன் பார்த்தது, பேசியது இல்லை ) எனக்குத் தொலைப்பேசியில் ”’ஊட்டத்தூர் ராமர்’ கோயிலுக்குச் சென்று அதைப் பற்றி எழுதுங்களேன்” என்றார்.
ஜனவரி மாதம் என் அனுபவங்களை எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் பிரமிப்பூட்டுபவை.
பலர் கோயிலை தேடிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். தொழிலதிபர் ஒருவர் தினமும் பிரசாதம், மாலைக்கு ஏற்பாடு செய்தார். வெளிநாட்டில் வாழும் வயதானவர்கள் சிலர் எனக்குப் போன் செய்து அழுதுவிட்டார்கள். ஒரு பெண்மணி எனக்கு இரவு முழுவதும் மனசு கஷ்டமாக இருந்தது என்று அடுத்த நாள் விடியற்காலையில் தனியாக பேருந்து பிடித்து கோயிலுக்குச் சென்று எனக்கு வாட்ஸ் ஆப்பில் கோயிலின் படங்களை அனுப்பினார். ஒருவர் ராமர் பெயருக்கு DD எடுத்து அனுப்பியிருக்கிறார். ஸ்ரீராம நவமிக்கு முதல் முறையாக 500 பேர் ஸ்ரீராமரை சீர் வரிசையுடன் சென்று தரிசித்துள்ளார்கள்.
தினமணி, குமுதம் பக்தி போன்ற பத்திரிக்கையில் இந்தக் கோயில் பற்றி கட்டுரைகள் வந்துள்ளது.
இந்தக் கோயிலுக்கு எப்படி உதவலாம் என்று பலர் அடியேனிடம் கேட்டார்கள். ஒரு முறை உதவி செய்துவிட்டு ஃபேஸ் புக் ஸ்டேட்ட்ஸ் மாதிரி மறக்காமல், தொடர்ந்து உதவி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இந்தக் கோயில் என்று இல்லை, இந்த மாதிரி இருக்கும் பல கோயில்களுக்கு உதவ வேண்டும் என்று மிகுந்த யோசனைக்குப் பின் அடியேனும், Dr.Gokul
Gokul Iyengar அவர்களும் ( திருநெல்வேலி, ஆழ்வார் திருநகரியில் இருப்பவர் ) சேர்ந்து ஒரு அறக்கட்டளையை நிறுவியிருக்கிறோம்.
அறக்கட்டளை பெயர்
"ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை"
"Ramanuja Desika Munigal Charitable Trust"
( டிரஸ்ட் சம்பந்தமாக வங்கியில் அக்கவுண்ட் திறப்பது போன்ற சில வேலைகள் பாக்கியிருக்கிறது)
பத்து பேர் ஆயிரம் ரூபாய் கொடுப்பதை விட ஆயிரம் பேர் பத்து ரூபாய் கொடுப்பது மேல். பணம் முக்கியம் ஆனால் அதைவிட முக்கியம் கைங்கரியம். சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். அதை அடுத்த சில வாரங்களில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த அறக்கட்டளையை உருவாக்கச் சென்னையில் ஆடிட்டர் திரு.வரதராஜன் தன் வேலை எல்லாம் விட்டுவிட்டு, தி.நகர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நடையாய் நடந்து இலவசமாக உதவி செய்து தன் கைங்கரியத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். .
ஸ்ரீராமானுஜர் 1000 ஆண்டில் அவருடைய 1001 உற்சவம் ஆரம்பிக்கும் இந்த நன்னாளில் இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த சந்தோஷம்.
-சுஜாதா தேசிகன்
12.4.2018
ஏகாதசி
( ஸ்ரீராம நவமி அன்று எடுத்த படங்கள் - அர்ச்சகர் அனுப்பியது
Please click here to read the old post related to this.