Feb 2, 2012

ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்லோகம் (MandraRajaPadha Slokam in Tamil)

Ahobilam Sri Malolan(Lakshmi Narasimhar)


அன்றலர்ந்த செந்தாமரையினை வென்று நிற்கும் திருமுக மண்டலமும், திருநேத்ரமும் படைத்தவன் எம்பெருமான்.  அடி பணிந்தோரின் பகைவர்களை அறவே பூண்டோடு அழித்திடுபவன். தமது சிம்ம கர்ஜனையால் அண்டங்கள் அனைத்தையும் அதிரச் செய்தவன்.  அப்படிப்பட்ட எங்கும் பரவி நின்ற உக்ர ரூபியான எம்பெருமானை நான் வணங்குகிறேன் என்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன். (1 ) 

வரத்தால் வலி மிக்கவன் அசுரனான ஹிரண்ய கசிபு.  அவனை நகத்தாலே தகர்த்து எறிந்த வீரனாகிய நரசிம்ஹனை நான் வணங்குகிறேன். (2)

திருவடி பாதாளத்திலும், திருமுடி அந்திரிஷத்திலும் எண் திக்கிலும் திருக்கரங்கள் பரவி நின்ற மஹா விஷ்ணுவாகிய நரசிம்ஹனை   நான் வணங்குகிறேன். (3 )



ஒளியுடைய சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் ஆகிய அனைத்திற்கும் ஒளியானவன்.  இவனுடைய ஒளியினால் எல்லாம் ஒளி பெறுகின்றன.  அப்படிப்பட்ட ஒளிமயமானவன், ஜ்வலிக்கின்றவனை நான் வணங்குகிறேன் என்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன். (4 )
எல்லாவற்றையும், எங்கும், எப்போதும் புலன்களின் உதவி இன்றியே நன்கு அறிபவன்.  முழுமுதலான எங்கும் முகமுடைய சர்வதோமுகனை நான் வணங்குகிறேன். (5 )
நரங்கலந்த சிங்கமதான திருவுருவத்துடன் தோன்றிய மகாத்மாவானவனை, மாபெரும் பிடரியுடனும், பற்களுடனும் காட்சி அளிக்கும் ஸ்ரீ நரசிம்ஹனை வணங்குகிறேன். (6 )
எவனுடைய பெயரை நினைத்தாலே பூதங்கள், பிசாசங்கள், ராகஷசர்கள் நடுங்கி ஒடுவர்களோ, தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்தொழியுமோ அப்படிப்பட்ட பீஷணனை (பயங்கரமானவனை) நான் வணங்குகிறேன். (7 )


எல்லோரும் எவனை அடி பணிந்து எல்லா விதமான மங்களங்களையும் அடைகின்றனரோ, மங்கலமானவளான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் சேர்ந்துறையும் மங்களமானவனை நான் நமஸ்கரிக்கின்றேன். (8 )

காலத்தில் வந்து பக்தர்களின் சத்த்ருகளுக்கு மிருத்யு ஆனவனான, மிருத்யுவிற்கும் மிருத்யுவான (மிருத்யுமிருத்யும்) வனை நான் வணங்குகிறேன். (9 )


அவன் திருவடிகளில் நம: என்று கூறி ஆத்ம நிவேதனம் சரணாகதி செய்து விட்டால் அவன் யாராயினும் காத்திடுவான்.  துயர் கெடும்.  இன்னல்கள் இடிபட்டோடும்.  இத்தகைய நலன்களை அருளும் எம்பெருமானை நான் வணங்குகிறேன். (10)
எல்லோரும் அவனது தார்களே.  இயற்கையிலே தார்கள்.  நானும் அவனுக்கு தான் தான் என்பதை நன்கு உணர்ந்த நான் அவனை வணங்குகிறேன். (11) 

இந்த மந்திரங்களுக்கு எல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்திர ராஜத்தின் பதங்களின் தத்வ நிர்ணயம் சங்கரனான என்னால் மிகவும் உகந்து வெளியிடப்பட்டது.  இந்த ஸ்ரீ மந்திர ராஜ பத ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் மதியத்தில், மாலையில் யார் உகந்து உரைக்க வல்லார்களோ அவர்களுக்கு நீங்காத செல்வமும், வளமிக்க கல்வியும், நீண்ட ஆயுளும் நலமுடன் விளங்கும் என்று பலச்ருதி கூறி முடிக்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன். (11)

நன்றி 
மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள். ஆசிரியர்: முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார்.


லக்ஷ்மி நரசிம்ஹர் திருப்பாதங்களே  சரணம்.

2 comments:

  1. After a long time, its good to see a post from you.. I am going to buy this book very soon from India.

    ReplyDelete
  2. It took time to type in tamil. This is wonderful slokam gifted to us by Sri Eshvarar. When we recite it daily, we can feel the closeness with Lakshmi Narasimhar.

    Once we understand each stanza of it, the feeling we get when we recite is purely heavenly.

    ReplyDelete