Sep 10, 2013

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர்

(nice post from tamilhindu blog )

காலந்தோறும் நரசிங்கம்

September 26, 2012
திருமாலின் திரு அவதாரங்களில் தனிச் சிறப்புடன் போற்றி வணங்கப் பெறும் அவதாரம் நரசிங்க அவதாரம் ஆகும். தொன்மைக் காலம் முதலே பாரத நாட்டின் பல பகுதிகளில் நரசிங்க வழிபாடு மேலோங்கியிருந்ததற்கான பற்பல வரலாற்றுச் சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன. இந்து தெய்வத் திருவுருவங்களின் பான்மையும் பெருமையும் தொன்மங்களிலும், சமய நூல்களிலும், இலக்கியங்களிலும், தத்துவ நூல்களிலும், சிற்பம் சித்திரம் ஓவியம் நடனம் முதலான நுண்கலைகளிலும் பல்வேறு வகையாக வெளிப்பட்டு நிற்கின்றன. நரசிம்ம அவதாரமும் அப்படியே. இந்த அனைத்துத் துறைகளின் இணைப்பையும் ஒத்திசைவையும் கொண்ட பார்வையே தெய்வத் திருவுருங்கள் குறித்த முழுமையான சித்திரத்தை நமக்கு அளிக்கும்.
இக்கட்டுரையில் நரசிங்க சிற்பங்கள் காலந்தோறும் அடைந்து வந்துள்ள மாற்றங்களை ஒரு கருடப் பார்வையாகப் பார்க்கலாம்.
படம் 1 – மதுராவில் கிடைத்த புராதன நரசிங்கர்
சிந்து-சரஸ்வதி நாகரிகத்தீன் சுவடுகளாக நமக்குக் கிடைக்கும் அகழ்வுத் தடயங்களில் ஒற்றைக் கொம்பு மிருகமும், முகத்தில் கொம்புகள் கொண்டு விலங்குகள் சூழ அமர்ந்திருக்கும் பசுபதி வடிவமும், யானை முக வடிவங்களும் எல்லாம் உண்டு. மனித-மிருக-தெய்வீக இணைப்புச் சின்னங்கள் நமது பண்பாட்டில் மிகத் தொன்மைக் காலத்திலிருந்தே அறியப்பட்டு வந்துள்ளன என்பதற்கு இவை சான்றுகளாகும். சிந்துவெளி அகழ்வுகளில் இதுவரை நமக்குக் கிடைத்துள்ளவற்றில் வெளிப்படையான சிங்கமுக இலச்சினையோ அல்லது நரசிங்க வடிவமோ இல்லை. ஆயினும் பழங்குடி வழிபாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இத்தெய்வ வடிவம் மிகத் தொன்மையான ஒன்று என்பதில் ஐயமில்லை.
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறைஎயிற்று அனல்விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத்
திருவல்லிக்கேணி கண்டேனே

என்றும்
அங்கண்ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய் அவுணன்
பொங்க, ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன்..

என்றெல்லாமும் ஆழ்வார்கள் பாடிப் பரவும் நரசிம்மாவதாரக் கதை, ராமாயணம் மகாபாரதம் ஆகிய இதிகாசங்களிலும் பல்வேறு புராணங்களிலும் மீண்டும் மீண்டும் எடுத்தியம்பப் பெற்றுள்ளது. பதினெட்டு உப புராணங்களில் நரசிம்ம புராணம் என்றே தனிப்பெரும் புராணமும் உண்டு.
மதுரா பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள சிவப்புக் கற்களாலான இந்த சிற்பமே (படம்-1) நமக்குக் கிடைத்துள்ள ஆகத் தொன்மையான நரசிங்க வடிவம் என்று கூறலாம். இந்தச் சிற்பம் அமெரிக்காவில் உள்ள ஃபிலடெல்பியா அருங்காட்சியகத்தில் உள்ளது. இரு கரங்களுடன் ஒரு சிறிய மனித உருவத்தை மடியில் கிடத்தி கைகளால் கிழிப்பது போன்ற தோற்றம் கொண்ட இந்த நரசிங்க வடிவத்தில் ஆடை மடிப்புகள் காந்தாரக் கலையின் அம்சங்களுடன் உள்ளது கவனிக்கத் தக்கது. பிற்கால நரசிம்ம சிற்பங்களில் உள்ளது போல பல கரங்களும், சங்கு சக்கரம் முதலான ஆயுதங்களும், மணிமகுடமும் எதுவுமின்றி மிக எளிமையான,இயல்பான தோற்றத்தில் உள்ளது. இந்த சிற்பத்தின் காலம் பொ.பி. 2 அல்லது 3ம் நூற்றாண்டு என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.
படம் 2 – எல்லோரா குகை சிற்பம்
இதற்கடுத்து குப்தர் காலத்திய சிற்பங்களில் இரணியனுடன் போரிடும் நரசிம்ம மூர்த்தங்கள் வட இந்தியாவில் விதிஷா போன்ற இடங்களில் நமக்குக் கிடைக்கின்றன. எல்லோரா குகைக் கோவிலில் குகை எண் 15ல் உள்ள நரசிம்மர் இரணியன் போர்க்காட்சி சிற்பம் (படம் – 2) பாதி சிதைந்த நிலையில் இன்று காணக் கிடைக்கிறது. கையில் குறுவாளுடன் இரணியன், அவன் மகுடத்தைத் தட்டியும் தோளைப் பற்றியும் தாக்கும் நரசிங்கர், பக்கவாட்டுத் தோற்றத்தில் நரசிங்க முகம் என்று அபாரமான கலை நேர்த்தியுடன் இந்த சிற்பம் வடிக்கப் பட்டிருக்கிறது. முற்றிப் போய் அடர்த்தியான மயிர்களுடன் இல்லாமல் ஒரு சிங்கக் குட்டி போல முகம் இருக்கிறது. நரசிம்மர் கரங்களில் சங்கு சக்கரம் இல்லை, வாள் மட்டுமே உள்ளது.
தென்னகத்தில் பல்லவர் காலத்திய (பொ.பி 7-9ம் நூற்றாண்டுகள்) நரசிம்ம சிற்பங்கள் பல காணக் கிடைக்கின்றன. சிங்கம் பல்லவர்களின் ராஜமுத்திரை என்பதும் நரசிம்ம வர்மன் என்று புகழ்பெற்ற பல்லவ மன்னன் இருந்ததும் நரசிம்ம வழிபாடு பல்லவர் ஆட்சியில் பரவலாக இருந்ததைக் காட்டுகிறது. பல்லவர்கள் ஆந்திரத்தின் கிருஷ்ணா நதிப் பகுதியிலிருந்து தமிழ் நாட்டுக்குள் வந்தவர்கள் ஆதலால் அங்கு பிரசித்தி பெற்றிருந்த நரசிம்ம வழிபாட்டை அவர்கள் கைக் கொண்டிருந்து தமிழகத்திலும் தொடர்ந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே திருமால் வழிபாடு செழித்திருந்தததை சங்க இலக்கியங்களின் வழி அறிகிறோம். பரிபாடல் இரணியனின் மார்பு கீண்ட திறத்தைப் போற்றிப் பாடுவதனால், நரசிம்ம அவதார தொன்மம் தமிழகத்தில் பண்டைக் காலம் முதலே நன்கறியப் பட்டிருந்தது என்பதும் புலனாகும்.
படம் 3 – காஞ்சி கைலாசநாதர் கோயில்
காஞ்சி கைலாச நாதர் கோயில் சுற்றில் ஒரு அற்புதமான நரசிம்மர் இரணியன் போர்ச்சிற்பம் உள்ளது (படம் -3). இரணியனும் நரசிம்மரும் துவந்த யுத்தம் செய்கிறார்கள். யுத்தத்தில் மோதும் அவர்களது கால்கள் மற்றும் கைகளின் இயக்கமும், யுத்த வேகத்தில் நரசிம்மரின் மாலைகளும், மார்பணிகளும் அசைவதும் அருமையாகக் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. சிங்கங்களும் யாளிகளும் தாங்கும் தூண்கள் கொண்ட கோஷ்டத்தில் இந்தச் சிற்பம் அமைந்திருப்பது வீர ரசம் பொங்கும் இந்தக் காட்சிக்கு இன்னும் மெருகூட்டுகிறது. சிவாலயங்களில் சுற்றுகளிலும் தூண்களிலும் விஷ்ணு மூர்த்தங்கள், குறிப்பாக நரசிம்மர் உருவங்கள் தொடக்கத்திலேயே இடம்பெறத் தொடங்கியிருந்தன என்பதற்கு இச்சிற்பம் சான்று பகர்கிறது. இதன் தொடர்ச்சியாகவே பின்னாளில் விஜ்யநகர, நாயக்கர் ஆட்சிக் காலங்களிலும் சைவ வைணவ ஒற்றுமையை வளர்க்கும் முகமாக, இருமதக் கோயில்களிலும் சிவ-விஷ்ணு சிற்பங்களை வடிப்பதை ஒரு மரபாகவே கடைப் பிடிக்கத் தொடங்கினர்.
போர்ச் சிற்பங்களிலேயே இடம் பெற்று வந்த நரசிம்மர் இந்தக் காலகட்டத்தில் சௌமியமான தெய்வமாகவும் எழுந்தருளத் தொடங்குகிறார். தென்னாற்காடு அருகில் முன்னூரில் உள்ள “இருந்த கோல நரசிம்மர்”, செங்கல்பட்டு அருகில் பணிமங்கலத்தில் உள்ள நரசிம்மர் ஆகிய திருவுருவங்கள் சுகாசனத்தில் அமர்ந்து வலது கையில் அபயஹஸ்தம் காட்டி இடது கையைத் தொடைமீது வைத்து அருள்பாலிக்கும் நிலையில் உள்ளன.
படம் 4 – இருந்த கோல நரசிம்மர்
பாண்டி நாட்டில் ஆனைமலையிலும், திருப்பரங்குன்றத்திலும் அமர்ந்து அருள்பாலிக்கும் நரசிம்ம வடிவங்கள் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவையே. புதுக்கோட்டை மாவட்டத்தில் மலையடிப்பட்டியில் உள்ள குகைக் கோயிலின் (8-ம் நூற்றாண்டு) நரசிம்மர் திருவுருவம் நம் நெஞ்சை அள்ளுவது. சாஸ்தா, தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்கள் வலது காலை மடித்து அதன் மீது வலது கரத்தை வைத்து அமர்ந்திருப்பது போன்ற லலிதாசனக் கோலத்தில் நான்கு கரங்களுடன் சங்கு சக்கர தாரியாக நரசிம்மர் இங்கு காட்சியளிக்கிறார் (படம்-4).
கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் 10 முதல் 16ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டங்களில் நரசிம்ம வழிபாடு மகோன்னத நிலையில் இருந்தது. ஹொய்சள, காகதீய பாணி கோயில்களிலும், பின்னர் விஜயநகர பாணி கோயில்களிலும் ஏராளமான நரசிம்ம சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. தென்னகத்தில் நரசிம்மருக்கென்று அமைந்த பழமையான தனிக் கோயில்களும் இவ்விரு மாநிலங்களிலேயே மிக அதிகமாக உள்ளன.
கர்நாடகத்திலுள்ள பேலூர்,ஹளேபீடு கோயில் சுற்றுகளில் உள்ள உக்ர நரசிம்ம சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவற்றில் நரசிம்ம மூர்த்தத்தின் சிற்ப இலக்கணம் முழுமையாக வளர்ச்சி பெற்றுள்ளதைக் காணலாம். இதன் உச்சமாக அமைந்துள்ள ஒரு சிற்பத்தில் (படம்-5a) இரணியனை மடியில் இருத்தி குடலைக் கிழித்து மாலையாக அணியும் தோற்றத்தில் நரசிம்மரைக் காண்கிறோம்.
படம் 5a – பேலூர் / ஹளேபீடு நரசிம்மர்
கண்கள் கோபத்தில் கனன்று வெளித்தள்ளி, சிங்க வாய் முழுதும் திறந்த நிலையில் உள்ளது. பன்னிரண்டு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, உலக்கை, மணி, வாள் போன்ற ஆயுதங்களைத் தாங்கியுள்ளார். அவரது கோபம் கண்டு கூப்பிய கரங்களுடன் கருடன் கீழே நிற்கிறான். திருமகள் அச்சத்துடன் பார்க்கிறாள். கீழே பிரகலாதன் நிற்பது சிறிய அளவில் சித்தரிக்கப் பட்டுள்ளது.
படம் 5b – பேலூர்/ஹளேபீடு உக்ர நரசிம்மர்
இதே கோயிலில் உள்ள இன்னொரு சிற்பத்தில் நரசிம்மர் இரணியனைக் கிழிக்கத் தொடங்குவதற்கு முன் பக்கத்தில் நிற்கும் அரக்கனின் முகத்தைக் பிய்த்தெடுக்க, அவனது கபாலம் வெளித்தெரிவது போன்ற காட்சி உள்ளது (படம்-5b) இன்னும் சில சிற்பங்களில் அரக்கன் உடலில் கூரான நகங்கள் பதிந்து உள்செல்லும் தருணம் நுட்பமாகக் காட்டப் பெற்றுள்ளது. இக்கோயில்களில் ஒரு சில லட்சுமி நரசிம்மர் சிற்பங்களும் உள்ளன என்றாலும் நரசிம்மரின் வீரத்தையும் இரணியனின் வதையையும் கொண்டாடுவதே மையக் கருத்தாக்கமாக உள்ளது. ஹொய்சள ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் இஸ்லாமிய படையெடுப்பினால் அந்த ராஜவமிசம் அழிந்தது. மக்களிடையே அன்னியர் தாக்குதலை எதிர்கொள்ளும் துணிவும், வீர உணர்வும் பெருக வேண்டும் என்பதைக் கருத்திக் கொண்டு இச்சிற்பங்கள் இவ்வாறு வடிக்கப் பட்டிருக்கலாம்.
பின்னர் பாமினி சுல்தான்களையும் தென்னகத்தில் அங்கங்கு ஆட்சி செலுத்தி வந்த இஸ்லாமிய குறுநில அரசுகளையும் விஜயநகர மன்னர்கள் வெற்றி கொண்டு தங்கள் பேரரசை நிறுவினர். விஜயநகர ஆட்சிக் காலத்தில் நரசிம்மர் உக்கிரம் தணிந்து யோக நிலையில் வீற்றிருப்பதற்கு இதுவே காரணமாக இருக்கக் கூடும். ஹம்பியில் உள்ள பிரம்மாண்டமான யோக நரசிம்மர் (படம் – 6) இக்காலகட்டத்திய கலைப்பாணியின் உச்சம் எனலாம். யோக பட்டம் முழந்தாளை அலங்கரிக்க, கால்களைக் குத்திட்டு ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்து, யோக நிலையில் இருக்கிறார் நரசிம்மர்.
படம் 6 – ஹம்பி யோக நரசிம்மர்
நான்கு கரங்களுடன், இரு கரங்கள் சங்கும் சக்கரமும் தாங்கி நிற்க, மற்ற இரு கரங்கள் முட்டிமீது நிலைத்திருக்கும் தோற்றம். சிங்கக் கண்கள் துருத்தி நிற்கின்றன, ஆனால் அவற்றில் கோபம் இல்லை. முகம் வீரமும், சாந்தமும், கம்பீரமும் கலந்த அழகுடன் செதுக்கப் பட்டுள்ளது. நரசிம்மருக்கு மேல் ஏழுதலை நாகம் குடைபிடித்து நிற்கிறது. திறந்த வெளியில் வியாபித்திருக்கும் இந்த 20 அடி சிற்பம் ஹம்பியின் மாட்சிக்கும், வீழ்ச்சிக்கும் வரலாற்று சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.
தலைக்கோட்டைப் போரில் ஹம்பியின் கலைச் சின்னங்கள் அனைத்தும் சிதைக்கப் பட்டன. அதற்கு இந்தச் சிற்பமும் தப்பவில்லை. அதனால், இப்போது கரங்கள் உடைந்த நிலையிலேயே காண முடிகிறது. நரசிம்மரின் இடது மடியில் அமர்ந்திருக்கும் லட்சுமியின் திருவுருவம் பெயர்க்கப் பட்டு அது முழுதாக சிதைக்கப் பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர் கருதுகிறார்கள். இக்கருத்து ஆதாரபூர்வமானதே. ஏனெனில் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த யோக லக்ஷ்மி நரசிம்மர் சிற்பம் ஒன்று (12ம் நூற்றாண்டு) அமெரிக்காவின் Toledo அருங்காட்சியகத்தில் உள்ளது. ஹம்பி நரசிம்மரின் சிதைவுபடாத முழு உருவம் எப்படி இருந்திருக்கும் என்பதை இந்தச் சிற்பம் (படம் -7) நமக்கு விளக்குகிறது.
படம் 7 – ஒரிஸ்ஸா பாணி யோக நரசிம்மர்
ஆந்திராவில் மூன்று மிக முக்கியமான நரசிம்ம தலங்கள் உள்ளன – சிம்ஹாசலம், அகோபிலம், மங்களகிரி. இந்த மூன்று தலங்களின் ஐதிகங்களும் ஸ்தல புராண வரலாறுகளும் தனித்துவம் கொண்டவை. சிம்மாசலத்தில் வராகமும், நரசிம்மமும் கலந்து வராக நரசிம்ம உருவில் வழிபடுகிறார்கள். மங்களகிரியில் சிங்கவாய் முழுதாகத் திறந்த நிலையில் அதி உக்கிர ரூபத்தில் நரசிம்மர் வீற்றிருக்கிறார். இயற்கை எழில் திகழும் அகோபிலம் வனப் பகுதியில் அருள்பாலிக்கும் நரசிம்மரின் ஒன்பது வடிவங்கள் நவ நரசிம்மர் என்று அழைக்கப் படுகின்றன. வைணவ ஆகமங்களில் குறிப்பிடப் படும் எல்லா வகையான நரசிம்ம மூர்த்தங்களும் அகோபிலத்தில் உள்ளன என்று கருதலாம். ஸ்தாணு நரசிம்மர், கேவல நரசிம்மர் என்று ஒரு வகைப் பாடு உண்டு. உக்ர, குரோத, வீர, விலம்ப, கோப, யோக, அகோர, சுதர்சன, லட்சுமி நரசிம்மர் என்று இன்னொரு வகைப் பாடு. அகோபிலத்தில் மாலோல நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், பாவன நரசிம்மர், குஹா நரசிம்மர் (குகையிலிருந்து வெளிப்படுபவர்) என்ற பெயர்களிலும் மூர்த்தங்கள் உண்டு. அகோபிலம் பகுதியில் பல நூற்றாண்டுகளாக வாழும் வனவாசி மக்கள் சமுதாயத்தினர் செஞ்சுக்கள் என்று அழைக்கப் படுகின்றனர். கரிய கட்டுறுதி கொண்ட உடலமைப்பும் கூர்மையான நாசியும் முகவெட்டும் கொண்டவர்கள் இவர்கள். கானகவாசிகளின் இந்தக் கட்டழகில் கடவுளே மயங்கி விட்டார் போலும்! செஞ்சுக்களின் குடியில் பிறந்த ஒரு பெண் மீது காதல் கொண்டு நரசிம்மரே இங்கு வந்து அவளை மணம் புரிந்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. அவள் செஞ்சு லட்சுமி என்ற திருநாமத்துடன் நரசிம்மரின் நாயகியாக அருள்பாலிக்கிறாள். செஞ்சு லட்சுமியை ஆதுரத்துடன் பார்க்கும் சிருங்கார நரசிம்மர் சிற்பம் (படம் – 8) அகோபிலத்தின் தனிச்சிறப்பு. திருமங்கையழ்வார் ‘சிங்கவேள் குன்றம்’ என்று தீந்தமிழில் இத்தலத்தைச் சிறப்பித்த்துப் பாடியிருக்கிறார்.
படம் 8 – சிருங்கார நரசிம்மர்
தமிழகத்தில் வைணவர்கள் அழகிய சிங்கர் என்ற செல்லப் பெயரால் நரசிம்மரை அழைக்கிறார்கள். திருவரங்க கோயிலின் உள்ளே கம்பர் மண்டபத்திற்கு எதிரில் மேட்டழகிய சிங்கர் சன்னிதி உள்ளது. கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய போது அதில் இரணியன் வதைப் படலத்தில் நரசிம்மாவதார கட்டத்தின் பாடல்கள் வரும் தருணம் இவர் சன்னிதிலியிருந்து சிம்ம கர்ஜனை புரிந்து அதை அங்கீகரித்ததாக வழக்கு உண்டு. நாமக்கல் மலையில் நரசிம்மருக்கென்று தனிக் கோயில் உள்ளது. தமிழகக் கோயில்களின் மண்டபங்களிலும் தூண்களிலும் ஏராளமான நரசிம்மர் திருவுருவங்களைக் காணலாம் (படம் 9 – வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் தூணில் உள்ள லட்சுமி நரசிம்மர்).
படம் 9 – வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்
கல்லில் மட்டுமல்லாது, உலோகத்திலும் நரசிம்ம திருமேனிகள் உருவாக்கப் பட்டன. அழகிய சோழர் கால யோக நரசிம்மர் சிலை ஒன்று அமெரிக்காவின் புரூக்ளின் மியூசியத்தில் உள்ளது (படம் – 10).
படம் 10 – அமெரிக்காவின் புரூக்ளின் மியூசியத்தில்…
யோக நரசிம்மர் வழக்கமாக கால்களை விறைப்பாக மடக்கி நேராக நிமிர்ந்திருப்பார். ஆனால் இந்த சிலையில் பக்கவாட்டில் சற்றே சாய்ந்த நிலையில், கால்கள் மிகத் தாழ்ந்து ஒரு ஆனந்தமான, சௌகரியமான யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். கல்லில் இருந்து உருகி உலோகத்துக்குள் வரும்பொழுது இயல்பாகவே ஒரு வித குழைவு ஏற்பட்டு விடுகிறது போலும்!
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு பிரதேசத்திலும் விதவிதமான நரசிம்மங்கள் நமக்குக் கிடைக்கும். பாகிஸ்தானில் உள்ள மூல்தான் (மூலஸ்தானம்) நகரம் தான் ஹிரண்யகசிபுவின் தலைநகராக இருந்தது என்றும் அங்கு தாண் தூணைப் பிளந்து ந்ரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது என்றும் ஒரு பழமையான ஐதிகம் உள்ளது. இந்த நகரில் இருந்த ஆலயங்களின் சுவடுகள் பல நூற்றாண்டுகள் முன்பே இஸ்லாமியப் படையெடுப்பில் அழிந்து விட்டன. குஜராத்திலும் ராஜஸ்தானிலும் உள்ள சிவ விஷ்ணு ஆலயங்களிலும், ஏன் சமண ஆலயங்களிலும் கூட வெண்பளிங்குக் கல்லில் மிளிரும் நரசிம்மர் சிற்பங்களைப் பரவலாகக் காணலாம். வங்கத்திலும் ஒரிசாவிலும் பழமையான நரசிம்மர் சிற்பங்கள் பல உண்டு. பூரி ஜகன்னாதர் கோயில் வளாகத்தில் உள்ள சக்ர நரசிம்மர் ஆலயம் கலையழகு கொண்டது. சாளக்கிராமங்களின் பிறப்பிடமான நேபாளத்தில் பல இடங்களில் பழமையான நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. தாந்திரீக அம்சங்கள் கொண்ட நரசிம்மர் சிற்பங்களும் அவற்றில் காணக் கிடைக்கின்றன.
வரலாற்றின் வழியாக நரசிம்மர் உருவங்கள் கொண்ட மாற்றங்களையும், பரிமாணங்களையும் ஒரு சிறு தீற்றலாக இக்கட்டுரையில் பார்த்தோம். பழங்குடி வேர்களிலிருந்து கிளைத்து வீரர் குடித் தெய்வமாக, பக்த ரட்சகனாக அவதரிக்கும் நரசிம்மர் பின்னர் யோகமும் போகமும் ஞானமும் கலந்த தத்துவக் கடவுளாக பேருருக் கொள்கிறார். ஆனால் இந்த நகர்வு ஒன்றை மறுத்து மற்றொன்றுக்குப் போவதல்ல. பண்பாட்டு ரீதியான இணைப்பினாலும், தத்துவச் செழுமையினால் தகவமைக்கப் பட்ட குறியீடுகளின் விகாசத்தினாலும் நிகழும் நகர்வு இது.
ஒவ்வொரு முறையும் ஒரு சிற்ப இலக்கண மரபு உருவாகிக் கொண்டிருக்கும்போதே அது மெலிதாக மீறப்பட்டும் விடுகிறது. அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவிடுகிறது என்பதையும் இதன் வழியாக நாம் புரிந்து கொள்ள முடியும். இந்திய செவ்வியல் கலைகள் மரபுக்கும், மரபு மீறலுக்குமான ஊடாட்டங்களாகவே எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இந்த தன்மையே அவற்றை பாரம்பரியப் பெருமை கொண்டதாகவும், அதே சமயம் உயிரோட்டமுள்ளதாகவும் ஆக்குகிறது.
ஹம்பி நரசிங்கத்தின் முகத்தில் தவழும் விரிநகை அதைத் தான் காலந்தோறும் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது.