Search This Blog

Feb 1, 2018

ஊட்டத்தூர் ராமர்

ஊட்டத்தூர் ராமர்

பகல் பத்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளைச் சேவித்துவிட்டு ’கனைத்து இளம்’ திருப்பாவை பாசுரத்துக்கு ’மனதுக்கு இனியானான’ ஸ்ரீராமரை பற்றி என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டு இருந்த சமயம் அந்தத் தொலைப்பேசி அழைப்பு வந்தது.
“அடியேன் தாஸன் என்று மிகப் பவ்யமாக ஆனால் பரபரப்பாக “இப்ப பேசலாமா ?” என்றது மறுமுனை
“உங்க பேர் என்ன ?”
“ஸ்ரீநிவாசன்…... “
“சொல்லுங்கோ”
“பல திவ்ய தேசம் சென்று உங்கள் அனுபவம் பற்றி எழுதுவதை எல்லாம் தவறாமல் படிப்பேன்…ஒரு விண்ணப்பம்…. “ என்று தயங்கி ஒரு நிமிஷத்தில் சொல்லி முடித்தார்.
“திருச்சி - சென்னை போகும் வழியில் பாடாலூரில் மிகப் பழமையான ராமர் கோயில் இருக்கு. ஏழாம் நூற்றாண்டு என்கிறாகள். வைகுண்ட ஏகாதசிக்குப் போனேன் ஸ்வாமி என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர் தான் கோயில் இருந்தார்கள்.. கஷ்டமா இருந்தது.... இந்தக் கோயில் பற்றியும் பற்றி எழுத வேண்டும்.. நிறையப் பேர் அந்தக் கோயிலுக்கு வர வேண்டும்.. ஏதாவது செய்யுங்கள்”
கோயில் பற்றி கூகிளில் தேடினேன். தகவல் கிடைக்கவில்லை. எனக்குத் தொலைப்பேசியில் அழைத்தவரைத் தொடர்பு கொண்டேன். அவர் அனுப்பிய SMS
“SriKothandaramaswamy temple,UTTATHUR,(via-PADALUR),4kms from PADALUR Jn on Trichy-Chennai Highway”
கூகிள் மோப்பில் கொஞ்சம் மேய்ந்த பிறகு கோயில் தட்டுப்பட்டது. குறித்து வைத்துக்கொண்டேன்.
இந்த மாதம் குடியரசு தினத்துக்கு ராமரைச் சேவிக்க சென்றேன். திருச்சி - சென்னை ஹைவேயில் இன்னும் இரண்டு கி.மி. யூ டர்ன் அடித்தால் அடையார் ஆனந்த பவன் என்ற பலகையை கடந்து சென்ற பிறகு கூகிள் கோயிலுக்குத் திரும்ப சொன்னது. ஊட்டத்தூர் வந்தடைந்தோம்.
திரு ரா.பி சேதுப்பிள்ளையின் “தமிழகம் ஊரும் பேரும்” என்ற புத்தகத்தில் ஊட்டத்தூர் பற்றிய குறிப்பு இது.
திருச்சி நாட்டைச் சேர்ந்த பெரம்பலூர் வட்டத்தில் உள்ள
ஊற்றத்தூரும் ஒரு பழைய சிவஸ்தலம் ஆகும். “உறையூர்
கடலொற்றியூர் ஊற்றத்தூர்” என்றெடுத்துப் பாடினார் திருநாவுக்கரசர்.
அவ்வூரில் அமர்ந்த இறைவன் தொகுமாமணி நாயகர் என்று
கல்வெட்டுக்களிற் குறிக்கப் படுகிறார். பிற்காலத்தில் குலோத்துங்க
சோழீச்சுரம் என்னும் திருக்கோயிலும் அவ்வூரில் எழுந்தது. இரண்டாம்
இராஜராஜன் அச் சோழீச்சுர முடையார்க்கு உழுத்தம்பாடி யூரைத்
தேவதானமாக வழங்கிய செய்தியைக் கல்வெட்டிற் காணலாம்.ஊற்றத்தூர்
என்னும் பெயர் இக்காலத்தில் ஊட்டத்தூர் ஆயிற்று”
முழுவதும் பசுமையான கிராமம், புது பெயிண்ட் ஐயனாரையும், சின்ன வெங்காயம் உரித்துக்கொண்டு இருந்தவர்களைக் கடந்து சென்ற போது குடியரசு தினத்துக்கு கிராமத்தில் கோயில் வாசலில் 12.30 மணிக்கு எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலிக்க விளையாட்டு போட்டிகள் நடத்திக்கொண்டு இருந்தார்கள்.
ஸ்ரீகோதண்ட ராமர் கோயில் கோபுரம் தெரிந்து நடை சாத்திவிட போகிறார்கள் என்று அவசரமாகக் கோயிலுக்குள் நுழைந்தவுடன் தூரத்தில் ஸ்ரீ சீதாதேவி ஸ்மேத ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீலக்ஷ்மணர் தெரிய ஒரு மாமி ஓடி வந்து
“வாங்கோ வாங்கோ… இந்தக் கோயிலுக்கு யாரும் வரதில்லை. என் பையன் தான் இவன் ஒன்பதாவது தலைமுறை.. இங்கே அர்ச்சகராக இருக்கிறான்..” என்று படபடப்பாக பேசினார். பேச்சில் ஏழ்மையும் சந்தோஷமும் கலந்திருந்தது.
கோயில் தூண்கள் வரிசையாக, சூரிய ஒளி ஒரு இடத்தில் அடிக்க
“திரு உடம்பு வான் சுடர்; செந்தாமரை கண்; கை கமலம்” என்று நம்மாழ்வார் கூறுவது போல உள்ளே கோதண்டபாணியாக ”தோற்றமாய் நின்ற சுடராக” ஸ்ரீராமர் இடது புறத்தில் சீதா தேவி, வலபுரத்தில் ஸ்ரீலக்ஷ்மணர் திருமுகங்களில் அமைதியைக் காண முடிந்தது.
திருச்சியிலிருந்து கொண்டு சென்ற மாலையைக் கொடுக்க அர்ச்சகர் அதை ஸ்ரீராமருக்கு சாத்தினார் ஆர்த்தியின் போது ஸ்ரீ லக்‌ஷ்மணர், சீதாவிற்கு மாலையே இல்லாமல் வெறும் கழுத்தாக இருப்பதைக் கவனித்தேன்.
“சீதை, லக்ஷ்மணருக்கு மாலை இல்லை.. பக்கத்தில் ஏதாவது கடை இருக்கா ?”
”இங்கே கடை எதுவும் இல்லை. ஊருக்கு வெளியே தான் போக வேண்டும்” என்றார் அர்ச்சகர்.
முன்று மாலையாக வாங்கிக்கொண்டு வந்திருக்கலாமே என்று நொந்துக்கொண்டு சேவிக்கும் போது அர்ச்சகர் சொன்ன விஷயம்
”நான் ஒன்பதாவது தலை முறை.. இதற்கு முன் என் தாத்தா கோயிலைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.. MRF ல் வேலை செய்துகொண்டு இருந்தேன். தாத்தா போன பிறகு கோயில் கைங்கரியம் தடைப்பட்டு விடக் கூடாதே என்று வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டேன்… ஊரில் யாரும் கோயிலுக்கு வருவதில்லை வெளியூரிலிருந்தும் யாரும் வருவதில்லை. எப்பாவாது யாராவது பரிகாரம் என்றால் வருவார்கள்…”
“உற்சவர்களை இல்லையா ? ”
“இங்கே பாதுகாப்பு கிடையாது… அதனால் பக்கத்தில் ஒரு சிவன் கோயில வைத்துப் பூட்டி வைத்திருக்கிறோம்”
மனம் வருந்திய போது அர்ச்சகர் தாயார் சொன்ன விஷயம் மேலும் வருத்தத்தை அளித்தது
“பெருமாளுக்கு விளக்கு ஏற்ற எண்ணைக் கூட இல்லை, வாரத்தில் இரண்டு நாள் புதன், சனிக்கிழமை தான் பெருமாளுக்குப் பிரசாதம் கண்டருள செய்கிறோம்.. இவன் வேலையை விட்டுவிட்டு வந்துட்டான்... இங்கே சம்பளம் கிடையாது… சின்ன குழந்தை இருக்கு …மசம் ஆயிரம் கூட வர மாட்டேங்குது.. “ என்று மேலும் சில குடும்ப விஷயங்களைச் சொன்ன போது மனம் கனத்தது.
”பெருமாளைப் படம் எடுக்கலாமா ?”
“தாராளமா எடுத்துக்கோங்கோ.. இதைப் பற்றி எழுதுங்கோ பலர் வந்தால் நன்றாக இருக்கும்”
கோயிலை சுற்றிப் பார்த்தோம். விசாலமான பழைய கோயில். கோயில் இடது புரத்தில் ஸ்ரீராமானுஜர், ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீநம்மாழ்வார் இருக்க அதைச் சேவிக்கும் போது
“இங்கே ஒரு சுரங்க பாதை இருந்தது. சமீபத்தில் அதை அடைத்துவிட்டார்கள்”
கோயில் உள் பிராகாரத்தை சுற்றிக்கொண்டு வந்த போது அங்கே ஸ்ரீஅனுமான் செய்த சாகசங்களை பார்க்க முடிந்தது. சுவரில் மீன் உருவம் செதுக்கியிருந்தார்கள். வெளி பிரகாரத்தில் சில சிற்ப வேலைபாடுகளை பார்க்க முடிந்தது.
வெளி பிரகாரத்துக்கு சென்ற போது அதன் பிரம்மாண்டம் தெரிந்தது. கோயில் மடப்பள்ளிக்குச் சென்ற போது அங்கே ஒரு டப்பா மடப்பள்ளி போல காலியாக இருந்தது.
“இங்கே பிரசாதம் எல்லாம் செய்வதில்லை. வாரத்துக்கு இரண்டு நாளைக்குத் தான் கண்டருள செய்கிறோம்.. வீட்டிலிருந்து ஏதாவது செய்துகொண்டு வருவோம்…”
எந்தக் காலத்து கோயிலாக இருக்கும் என்று நான் எடுத்த படங்கள் சிலவற்றை நண்பர் சித்திரா மாதவனுக்கு அனுப்பிய போது அவர் உடனே அனுப்பிய தகவல் இது.
“From the photos you have sent this temple belongs to the Vijayanagara Times of the 16th century or later. In case the central part had been constructed earlier, then we have to search for traces of antiquity in and around the Garbha Griham. As it is, this is Vijayanagara style of architecture.”
( நன்றி Chithra Madhavan )
இதே போல ராமரை எங்கோ பார்த்திருக்கிறேன் என்று படங்களை தேடிய போது ஹம்பியில் கோதண்ட ராமர் கோயில் நினைவுக்கு வந்தது.
பொதுவாக தமிழ்நாட்டு ராமர் கோயில்களில் ஸ்ரீராமரின் வலது புறத்தில் சீதை அலங்கரிப்பாள், வட தேசம், கர்நாடகாவிலும் சீதை இடதுபுறத்தில்.
( இடது புறத்தில் இருந்தால் அது பட்டாபிஷேக கோலம் என்ற தகவலையும் சித்திரா மாதவன் கூறினார் )
கோயில் வாசலில் ஒருவர் பலகையில் ஏதோ எழுதிக்கொண்டு இருக்க அதைப் பற்றி விசாரித்தேன்
“கோயில் பற்றி போர்ட் வைத்தால் நான்கு பேர் வந்துவிட்டுப் போவார்கள்… இதற்கு இத்தனை நாள் பர்மிஷன் கிடைக்கவில்லை. இப்ப தான் கிடைத்தது...போர்ட் மூவாயிரம் ரூபாய்… “ என்றார்.
ஸ்ரீராமரை மீண்டும் ஒரு முறை சேவித்துவிட்டு காரில் புறப்படும் போது ஊருக்கு வாங்கிய எண்ணை, அரிசி காரில் இருந்தது நினைவுக்கு வர அதைக் கோயிலுக்கு சம்பர்பித்துவிட்டு மனதில் ஏதோ வருத்ததுடன் கிளம்பினோம்.
ஊருக்கு வெளியே ஹைவேயை தொடும் போது ஒரு பூக்கடை கண்ணில் பட்டது.
“தெரிந்திருந்தால் இங்கிருந்து மாலை வாங்கிக்கொண்டு சென்றிருக்கலாம்..
அடுத்த தடவை போகும் போது லக்ஷ்மணர், சீதைக்குச் சேர்த்து மூன்று மாலையாக வாங்கிக்கொண்டு போக வேண்டும்… ” என்று காரை ஹைவேயில் ஓட்ட ஆரம்பித்தேன்…
நதாதூர் அம்மாள் பரத்வாதி பஞ்சகம் என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். பெருமாளின் ஐந்து நிலைகளைப் பற்றி கூறுவது இது -
பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை. பயப்பட வேண்டாம் எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.
பரத்துவம் - வைகுண்டபதியாக இருக்கிறான்.
வியூகம் - பாற்கடலில் இருந்துகொண்டு ஜகத்ரட்சகனாக இருக்கிறான்.
விபவம் - பெருமாள் அவதாரங்களைக் குறிக்கும் ( வாமன, ராமர், கண்ணன் .. )
அந்தர்யாமி - எல்லா உயிர்களுக்குளும் இருக்கிறான்.
அர்ச்சை - எல்லாக் கோயில்களிலும் நாம் பார்க்கும் பெருமாள்.
அர்ச்சை கடைசியில் வருவதால் தாழ்ந்த நிலை என்று நினைக்க வேண்டாம். அர்ச்சை என்பது அவதாரமாகத் தான் நம் பூர்வர்கள் கொண்டாடினார்கள். அதனால் தான் அர்ச்சாவதாரம்.
அர்ச்சாவதாரம் என்றால் எம்பெருமான் நம் அர்ச்சனையை ஏற்றுக்கொள்கிறான். ( அவனுக்கு அர்ச்சனை செய்பவர் - அர்ச்சகர் ).
“ஆழ்வார்கள் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே” என்கிறது ஸ்ரீவசன பூஷண வாக்கியம்.
“செளலப்பியத்திற்கு எல்லைநிலம் அர்ச்சாவதாரம்” என்றும் “இதுதான் (அர்ச்சாவதாரம்) பர வியூக விபவங்கள் போலன்றிக்கே கண்ணால் காணலாம் படி இருக்கும்” என்கிறது முமுக்ஷுப்படி
ராமாவதாரம், கிருஷ்ணாவதாரத்தில் நாம் பெருமாளுக்கு சென்று புஷ்பம் சேர்க்க முடியாது. ஆனால் அர்ச்சாவதாரத்தில் தேர் ஓட்டிய பார்த்தசாரதிக்கு, வெண்ணெய் திருடிய நம்பெருமாளுக்கு ஓவர் நைட் பஸ், ரயிலில் சென்று புஷ்பம் சமர்ப்பிக்கலாம்.
அவதரங்களிலேயே ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள் ’பூர்ண அவதாரங்கள்’ என்பார்கள். அதாவது they were complete. இத்தானைக்கும் ராமர் மட்டும் தான் தன்னுடன் எல்லோரையும் வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார், கண்ணன் தனியாக தான் சென்றான்.
பூர்ண என்ற சொல்லைக் கட்டிலும் பரிபூரணம் ஒரு படி மேல் பரிபூரணம் - Perfect. பரிபூரண அவதாரம் என்றால் அது அர்ச்சாவதாரம் தான்.
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாடகத்தில்
உலகம் ஏத்தும்
தென் ஆனாய்! வட ஆனாய்! குட பால் ஆனாய்!
குணபால மத யானாய்! இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய்!* பின் ஆனார் வணங்கும் சோதி!
திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே!
“பின் ஆனார் வணங்கும் சோதி!” அதாவது அவதார காலத்துக்குப் பின் வந்தோர் வணங்கும்படி இருக்கிறார் பெருமாள் என்கிறார் ஆழ்வார்.
மேலே கூறிய ஐந்து நிலைகளிலும் எல்லாத் திருக்குணங்களும் நிறைந்த இடம் அர்ச்சாவதாரமே என்று தெரிந்துகொண்டு சரணாகதி செய்வதற்கு ஏற்ற இடம் என்று முடிவுகட்டியவர்கள் ஆழ்வார்கள்.
அர்ச்சாவதாரமாக சில இடங்களில் படுக்கையை விரித்து பக்தர்கள் வரும் போது வரட்டும் என்று படுத்துக்கொண்டு இருக்கிறான். சில இடங்களில் நிற்பதைப் பார்த்தால் யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு நிற்பது மாதிரி தோன்றும்.
கார் ஓட்டிக்கொண்டு நாம் அவனைச் சேவிப்பது பெரிய சாகசம் மாதிரி நினைக்கிறோம். நமக்காகக் காலங்காலமாக நின்றுகொண்டே இருக்கிறான் ? அதைவிடவா இது பெரிசு ?
நாம் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை “உள்ளேன் ஐயா!” என்று அட்டண்டன்ஸ் கொடுத்தால் போதும். அப்பாடா வந்துவிட்டான் என்று மகிழ்கிறான்.
மணி 2.30. பூக்கடையை தாண்டியதும் “அப்பா Lakshmana and Sita have also done great deeds.. மாலை வாங்கி அவர்களுக்குக் கொடுத்துவிட்டு போகலாம்” என்றான் அமுதன்.
பூமாலையை வாங்கிக்கொண்டு மீண்டும் ஊருக்குள் சென்றோம். கோயில் சாத்தியிருந்தது. அர்ச்சகரைப் போனில் தொடர்பு கொண்ட போது “சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்.. இதோ வந்துவிட்டேன்” என்று பாதி சாப்பாட்டில் எழுந்துகொண்டு வந்தார்.
மீண்டும் கதவு திறந்து இளையபெருமாள், சீதா தேவிக்கு மாலை சாற்றிய பிறகு தான் மனதுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இந்த மாலை கொஞ்ச நாள் வாடாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கிளம்பினோம்.
கோயில் எப்படிப் போக வேண்டும் என்று கூகிள் மேப் கொடுத்திருக்கிறேன். கூட்டமாகச் சென்றுவாருங்கள், ”ஆர்வமே நெய்யாக” கொஞ்சம் எண்ணை, புஷ்பம், அரிசி எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.
துவஜஸ்தம்பம் எனப்படும் கோயில் கொடிமரம் இந்தக் கோயிலில் இல்லை ஆனால் வெளியில் ஸ்ரீகருடாழ்வார் பெருமாளைப் பார்த்துக்கொண்டும், அவருக்குப் பின்புறம் ஸ்ரீஅனுமார் யாராவது வந்தால் வரவேற்க காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
31.1.2018
தை பூசம்
ஸ்ரீஉடையவர் 'தான் உகந்த திருமேனி’ பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள்
பிகு: அர்ச்சகர் பெயர் ஸ்ரீ தாமோதரன். போன் நம்பர் +91-80984 46462
3 comments:

 1. நமஸ்காரம்...கலங்கார்த்தாலேயே ராம லக்ஷ்மண சீதா தேவியை தரிசித்தது சந்தோஷம் என்றாலும் பெருமாள் பிராட்டியின் நிலை கண்டு கலங்கினேன். அருகில் உள்ள சிவாலயம் பற்றியே அறிவேன். ஒரு பிரபலம் எழுதிய கட்டுரையால்..இன்னும் போனது இல்லை.பொழுது விடியட்டும்..அர்ச்சகருடன் பேசுகிறேன்..இன்று அல்லது நாளை சென்று என்னால் இயன்றவைகளை வாங்கி தந்து வருகிறேன்..தர்மமே உருவானவன் ...இன்று "தர்மம்" கேட்டு நிற்கும் நிலையா? தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி. ஸ்ரீ ராமா..

  ReplyDelete
 2. namaswakar swamy...
  adiyaval too will contribute. Desikan sir, the one who posted it originally said he will plan for regular income instead of one time payment. waiting for it.. share your experience too after visiting that temple.

  thanks..

  ReplyDelete
 3. very interesting .... noted to visit , all HIS blessings and call

  ReplyDelete