Search This Blog

Jan 31, 2017

பரிபூரண சரணாகதி



ஒருசமயம் ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில்கிருஷ்ணாவதாரம்பற்றி தாம் செய்த உபன்யாசத்தில் கிருஷ்ணன், சலவைத் தொழிலாளியிடம், சலவை செய்த தமது துணிகளைக் கேட்டபோது, அவன் தர மறுத்ததாகக் கூறினார்!

அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக ரங்கநாதரின் துணிகளை இனி, நானே துவைத்துத் தருகிறேன்எனக் கூறினான்.

அப்படியே செய்எனக் கூறினார் ராமானுஜர்!

அந்த சலவைத் தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, ராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். ராமானுஜரும் அவனை மனமாறப் பாராட்டுவார்.

ஒரு நாள் அவன் ராமானுஜரிடம், நீங்கதான் என்னைப் பாராட்டறீங்கஆனால் ரங்கநாதர் பாராட்டலியேஎன்றான்.

அது கேட்டு ராமானுஜர் அவனை ரங்கநாதரிடம் அழைத்துச் சென்று, உங்களுக்காக இவன் தினமும் சிரத்தையாக, துணிகளைத் துவைத்துக் கொண்டு வந்து கொடுக்கிறான்! ஒருநாள் அவனிடம் பேசினால்தான் என்ன?” எனக் கேட்டார்.

உடனே ரங்கநாதர் அவனிடம், உனக்கு என்ன வேண்டும் கேள்?” என்றார்.

சாமி, கிருஷ்ணாவதாரத்திலே, உங்களுக்கு துவைத்த துணிகளைத் தர மாட்டேன்னு சொன்னானேஅவனை மன்னித்து அவனுக்கு நீங்கள் முக்தி அளிக்க வேண்டும்!” என்றான்.

அவனை மன்னித்து விட்டேன். அப்பொழுதே அந்த விஷயத்தை மறந்தும் விட்டேன்என்றார் ரங்கநாதர்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த ராமானுஜர் கிருஷ்ணாவதாரத்தில் தவறு செய்த ஒருவனுக்காக முக்தி கேட்டியே, உனக்காக நீ ஏன் ஒண்ணுமே கேட்கலேஎனக் கேட்டார்.

அதற்கு அந்தச் சலவைத் தொழிலாளி, அதை நீங்க பார்த்துக்குவீங்க சாமிஎன்றான். இதனைக் கேட்ட ராமானுஜர், மனம் நெகிழ்ந்து அவனை ஆசீர்வாதம் செய்தார்.

உண்மையான பக்தர்கள் மற்றவர்களைப் பற்றித் தான் கவலைப்படுவார்கள். தம்மைப் பற்றி நினைப்பதில்லை. அதை குருவிடம் விட்டு விடுவார்கள்